சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் அணி தடுமாறும் - பாக். முன்னாள் வீரர்

அமெரிக்காவிடம் தோற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தடுமாறும்.;

Update:2024-06-08 07:22 IST

Image Courtesy: AFP

லாகூர்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 159 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் அணி தடுமாறும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த ஆட்டத்தில் (அமெரிக்காவுக்கு எதிராக) பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பரிதாபகரமானது. வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு அங்கம். ஆனால் கடைசி பந்து வரை நீங்கள் போராட வேண்டும். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மோசமானது. அமெரிக்காவிடம் தோற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர்8 சுற்றுக்கு முன்னேற தடுமாறும்.

ஏனெனில் அவர்கள் அடுத்து இந்தியாவுடன் மோத வேண்டும். மேலும் இரு நல்ல அணிகளுடன் (அயர்லாந்து மற்றும் கனடாவுக்கு எதிராக) விளையாட வேண்டி உள்ளது. இந்த ஆட்டத்தை பொறுத்தவரை அமெரிக்கா தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்தியதே திருப்புமுனை. பீல்டிங் மெச்சும்படி இல்லை. மொத்தத்தில் பாகிஸ்தான் விளையாடிய விதம் சராசரியாகவே இருந்தது. சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்பது, 36 ரன்கள் எடுப்பது போன்றது. அமெரிக்க அணி சிறப்பாக ஆடியது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்