உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகும் நசீம் ஷா..?
நசீம் ஷா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்,
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களது பந்துவீச்சு. சீனியர் வீரர்களான நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேக பந்துவீச்சாளர் நசீம் ஷா வரும் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார். இதனால் அவர் ஆட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
இந்த நிலையில் துபாயில் அவருக்கு மேற்கொண்ட முதற்கட்ட ஸ்கேன் பரிசோதனையின்படி அவர் குணமடைய சில மாதங்கள் ஆகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களில் அவரது இரண்டாம் நிலை ஸ்கேன் முடிவுகள் கிடைத்தவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.