'நான் நிரந்தரமாக விளையாடிக்கொண்டிருக்கப்போவதில்லை' - விராட் கோலி சூசகம்

‘நான் நிரந்தரமாக விளையாடிக்கொண்டிருக்கப்போவதில்லை’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-10 23:03 GMT

கவுகாத்தி,

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கவுகாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இது விராட் கோலியின் 73வது சதம் ஆகும்.

இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இலங்கை வீரர் தசன் ஷனகா 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் ஆட்ட நாயகன் விருதை இந்திய வீரர் விராட் கோலி தட்டிச்சென்றார்.

போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, தான் நிரந்தரமாக விளையாடிக்கொண்டிருக்கப்போவதில்லை' என்று ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், போட்டியில் எதேனும் கடினம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. போட்டிக்கு நான் தயாராவதும், நோக்கமும் எப்போதும் ஒன்றாகவே உள்ளது. அணிக்கு கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் தேவை என்பதை நான் புரிந்துகொண்டேன். போட்டியின் 2-வது பாதியில் மைதானத்தின் சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள முயற்சித்தேன்.

மிகவும் வலிமையான ஸ்கோரை பெற முயற்சித்தேன். விரக்தி உங்களை எங்கும் கொண்டுசெல்லாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் எதைப்பற்றியும் குழப்பிக்கொள்ளக்கூடாது. நீங்கள் மைதானத்திற்கு சென்று பயமின்றி விளையாடவேண்டும். நான் எல்லாவிஷங்களையும் கட்டுப்படுத்தமுடியாது. சரியான காரணங்களுக்காக நீங்கள் விளையாடவேண்டும், இது தான் உங்களின் கடைசி ஆட்டம் என்ற மனநிலையில் நீங்கள் விளையாடவேண்டும்... அதில் மகிழ்ச்சிகொள்ளவேண்டும். விளையாட்டு தொடர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கும். நான் நிரந்தரமாக விளையாடப்போவதில்லை, நான் மகிழ்ச்சியான சூழ்நிலையில் உள்ளேன். விளையாடும் எனது நேரத்தில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்