இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணிக்கு 285 ரன் இலக்கு; இன்று கடைசிநாள் ஆட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்துக்கு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-12 19:37 GMT

கிறைஸ்ட்சர்ச்,

மேத்யூஸ் சதம்

நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்களும், நியூசிலாந்து 373 ரன்களும் எடுத்தன. 18 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்களுடன் தடுமாறியது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியை முன்னாள் கேப்டன் மேத்யூஸ் நிமிர வைத்தார். நேர்த்தியாக ஆடி தனது 14-வது சதத்தை நிறைவு செய்த மேத்யூஸ் 115 ரன்களில் (235 பந்து, 11 பவுண்டரி) விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் ஆனார். சன்டிமால் (42 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (47 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 105.3 ஓவர்களில் 302 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர்கள் பிளேர் டிக்னெர் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இலங்கை அணி நியூசிலாந்துக்கு 285 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு எந்த அணியும் 201 ரன்களுக்கு மேல் விரட்டிப்பிடித்ததில்லை.

சாதனை இலக்கு

இந்த சாதனை இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் டிவான் கான்வேயின் (5 ரன்) விக்கெட்டை இழந்து 17 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் (11 ரன்), கேன் வில்லியம்சன் (7 ரன்) களத்தில் உள்ளனர். இந்த டெஸ்டில் நியூசிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 257 ரன் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. தற்போதைய சூழலில் இரு அணிக்குமே வெற்றி வாய்ப்பு தெரிவதால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். அந்த அணி தோற்றால் இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று உறுதியாகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்