நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா - 175 ரன்கள் குவித்து அசத்திய மார்க்ரம்

நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2023-04-02 21:10 GMT

image courtesy: Proteas Men twitter

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது. ரன்மழை பொழிந்த ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம் 175 ரன்களில் (126 பந்து, 17 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்களில் யாரும் இதுவரை இரட்டை சதம் அடித்ததில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்ரம் 45-வது ஓவரில் அவுட் ஆகிப் போனார். டேவிட் மில்லர் 91 ரன்கள் (61 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) நொறுக்கினார். பின்னர் ஆடிய நெதர்லாந்து 39.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் சிசான்டா மகாலா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக நுழையும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்திருக்கிறது.

அடுத்து மார்க்ரம், மில்லர், மகாலா, கிளாசென், குயின்டான் டி காக், ரபடா, நோர்டியா உள்ளிட்ட தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல்.-ல் பங்கேற்க உடனடியாக இந்தியாவுக்கு கிளம்புகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்