இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை உடைப்போம் - ஆஸ்திரேலிய வீரர் சவால்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Update: 2024-09-06 10:04 GMT

image courtesy: PTI

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை பைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அப்படியிருந்தும் கடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தியா சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். அதனாலயே தங்களுடைய சொந்த மண்ணில் கூட அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இம்முறை இந்தியாவின் பலமான வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆஸ்திரேலியா அவர்களின் ஹாட்ரிக் வெற்றி கனவை உடைக்கும் என்று அவர் சவால் விடுத்துள்ளார். அதற்காக இப்போதே தயாராகி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இந்த 2 அணிகள் ஒன்றாக விளையாடும்போது எப்போதுமே எனர்ஜி உச்சமாக இருக்கும். அந்த அணிகள் மோதும் போட்டிகள் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து உட்பட எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவே அவர்களை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் முன்னிலைப்படுத்துகிறது. அதனாலேயே ஆஸ்திரேலியாவில் அவர்களை வீழ்த்துவது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கோடைகாலத்தில் நாங்கள் அவர்களை உண்மையான அழுத்தத்தின் கீழ் தள்ளி வெல்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்