கடைசி டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை...!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது கடைசி இன்னிங்சை விளையாடிய எல்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Update: 2024-01-03 15:59 GMT

image courtesy; twitter/ @ICC

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் தடுமாற்றத்துடனே பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 153 ரன்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் அடுத்த 6 விக்கெட்டுகளை ரன் எதுவும் அடிக்காமல் இழந்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபடா, நிகிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது கடைசி இன்னிங்சை விளையாடிய எல்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்