கடைசி ஒருநாள் போட்டி; ரஹ்மத்- ஓமர்சாய் அரைசதம் - ஆப்கானிஸ்தான் 266 ரன்கள் சேர்ப்பு
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.;
கொழும்பு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் இப்ராகிம் ஜட்ரான் 13 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரஹ்மத் ஷா களம் இறங்கினார். குர்பாஸ் - ரஹ்மத் ஷா இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் குர்பாஸ் 48 ரன்னிலும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய ஹஸ்மத்துல்லா ஷாகிடி 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அல்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் இக்ராம் அலிகில் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அலிகில் 32 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓமர்சாய் அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஒவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஹ்மத் 65 ரன், ஓமர்சாய் 54 ரன் எடுத்தனர். இதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாட உள்ளது.