ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது

தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

Update: 2023-09-16 23:08 GMT

Image Courtesy : @ProteasMenCSA 

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடந்தது.

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. அந்த அணி 400 ரன்னை தாண்டுவது இது 7-வது முறையாகும். 5-வது விக்கெட்டுக்கு ஹென்ரிச் கிளாசென் (174 ரன்கள், 83 பந்து, 13 பவுண்டரி, 13 சிக்சர்), டேவிட் மில்லர் (82 நாட்-அவுட்) இணை 92 பந்துகளில் 222 ரன்கள் திரட்டி வியக்கவைத்தது. ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப் இதுவாகும். அத்துடன் அந்த அணி கடைசி 10 ஓவர்களில் 173 ரன்கள் குவித்ததும் சாதனையாக அமைந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

மேலும் 5-வது வரிசையில் களம் கண்டு அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் 174 ரன்கள் எடுத்ததன் மூலம் 5-வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டின்றி 113 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் அவர் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சக நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் லீவிஸ்சின் (113 ரன்கள்) மோசமான சாதனையை சமன் செய்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ், மிக்கேல் நேசர், நாதன் எலிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (17 ரன்) ஜெரால்டு கோட்ஜி வீசிய பந்து கையில் தாக்கியதால் காயம் அடைந்து வெளியேறினார். நிலைத்து நின்று தனியாக போராடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 99 ரன்னில் (77 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) ரபடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.

34.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 252 ரன்னில் அடங்கியது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி 4 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 3-வது சதம் விளாசிய தென்ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. முதல் 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வென்று இருந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்