லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கா அதிரடி ஆட்டம்...கண்டி பால்கன்ஸ் 175 ரன்கள் குவிப்பு
கண்டி தரப்பில் அதிரடியாக ஆடிய ஹசரங்கா 32 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
தம்புல்லா,
5 அணிகள் இடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புல்லாவில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் காலே மார்வெல்ஸ் மற்றும் கண்டி பால்கன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற காலே மார்வெல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கண்டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சண்டிமால் மற்றும் பிளெச்சர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சண்டிமால் 1 ரன்னிலும், அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 0 ரன், காமிந்து மெண்டிஸ் 10 ரன், பவன் ரத்நாயக்க 0 ரன், மேத்யூஸ் 25 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து கேப்டன் வனிந்து ஹசரங்கா களம் இறங்கினார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய பிளெச்சர் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தசுன் ஷனகா களம் இறங்கினார். இதில் ஹசரங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய ஹசரங்கா 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கண்டி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கண்டி தரப்பில் அதிரடியாக ஆடிய ஹசரங்கா 32 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். காலே தரப்பில் இசுரு உதானா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே மார்வெல்ஸ் அணி ஆட உள்ளது.