'இந்திய அணியின் துருப்பு சீட்டாக கோலி, பும்ரா இருப்பார்கள்' - சடகோபன் ரமேஷ்

இந்திய அணியின் துருப்பு சீட்டாக கோலி, பும்ரா இருப்பார்கள் என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்தார்.

Update: 2023-10-04 22:50 GMT


கிரிக்கெட்டர், நடிகர், வர்ணனையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சடகோபன் ரமேஷ். 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியவர். அவரது பார்வையில் 13-வது உலகக் கோப்ைப போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதை அறிய அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இந்த உலகக் கோப்பை போட்டியில் அரைஇறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: இது கஷ்டமான கேள்வி. ஏனெனில் நிறைய அணிகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி அரைஇறுதிக்கு வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்குள் விளையாடுவதால் நமது அணி மிகப்பெரிய வலுவான அணியாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் இந்தியா அரைஇறுதிக்கு வரும் என்று சொல்லலாம். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை சொல்வேன். வெள்ளை நிற பந்தில் இங்கிலாந்து சிறந்த அணியாக உருவெடுத்து வருவதுடன் நன்றாகவும் ஆடி வருகிறார்கள். அவர்கள் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்கள். எனது கணிப்பில் 3-வது தென்ஆப்பிரிக்காைவ கூறலாம். அவர்கள் எப்போதும் அரைஇறுதி வரை நன்றாக விளையாடக்கூடியவர்கள். அதற்கு அப்புறம் அவர்கள் எப்படி தாண்டுவார்கள் என்பது வேறு விஷயம். பெரும்பாலும் அவர்கள் 'நாக்-அவுட்' சுற்றுகளில் லபக்கென்று விழுந்து விடுவார்கள். நான் ஏன் தென்ஆப்பிரிக்காவை சொல்கிறேன் என்றால் அவர்களது வீரர்கள் எல்லாம் ஐ.பி.எல். போட்டியில் நன்றாக ஆடினார்கள். இங்குள்ள ஆடுகளங்களில் நன்றாக விளையாடகூடிய திறமை மிகவும் முக்கியமானது. டேவிட் மில்லர், கிளாசென், குயின்டான் டி காக் போன்ற தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளங்களிலும் தங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஐ.பி.எல். போட்டியின் போது நிரூபித்து இருக்கிறார்கள். எனவே தென்ஆப்பிரிக்கா அரைஇறுதிவரை வர வாய்ப்பு இருக்கிறது.

அரைஇறுதியை எட்டும் 4-வது அணி எது என்பதில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். நியூசிலாந்தை பொறுத்தவரை ஐ.சி.சி. தொடர்களில் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடரில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் கொஞ்சம் கஷ்டப்படுவார்களோ என்று தோன்றுகிறது. இந்த வகையில் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை விட சிறப்பாக ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒருவேளை ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறலாம். இந்த 5 அணிகளில் இருந்து தான் 4 அணிகள் அரைஇறுதிக்கு செல்லும் என்று கருதுகிறேன்.

கேள்வி: இந்திய அணியின் வீரர்கள் தேர்வு எப்படி இருப்பதாக கருதுகிறீர்கள்? அணியின் பலம்? பலவீனம் என்ன?

பதில்: இந்திய அணியின் பலம் என்னவென்றால் பேட்டிங்கை எடுத்தால் எல்லோரும் நன்றாக விளையாடி வருகிறார்கள். ஆசிய கோப்பையில் இருந்து பார்த்தால் கோலி, ராகுல், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் கடைசி 2 ஆட்டங்களில் நன்றாக ஆடினார். ரோகித் சர்மா நல்ல பார்மில் இருக்கிறார். பவுலிங்கும் ரொம்ப நன்றாக போட்டு இருக்கிறார்கள். முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா என எல்லோரும் பவுலிங்கில் கலக்கி வருகிறார்கள்.

அதேவேளை பீல்டிங்கில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். கேட்ச் உள்ளிட்ட விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டும். மற்றபடி எல்லாவற்றிலும் நமது அணி தயாராகவே இருக்கிறது.

இந்திய அணியில் ஆப்-ஸ்பின்னர் ஆர்.அஸ்வினை சேர்த்து இருப்பது நிச்சயம் உதவிகரமாக இருக்கும். சமீபத்தில் நடந்த போட்டிகளில் நமது அணிக்கு எதிராக ஆப் ஸ்பின்னர்களான அசலங்கா (இலங்கை), மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தினர். உலகக் கோப்பையில் 9 லீக் ஆட்டங்களில் கிட்டத்தட்ட 25 இடக்கை பேட்ஸ்மேன்கள் விளையாடுவார்கள். அதில் டேவிட் வார்னர், டேவிட் மில்லர், குயின்டான் டி காக் உள்ளிட்ட 10 உயர்தர பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்களை சமாளிக்க ஆப்-ஸ்பின்னரான அஸ்வினின் பந்து வீச்சு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி: யார் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினமானதாகும். நான் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று சில அணிகளை சொல்லி இருக்கிறேன். அதில் கூட ஒன்றிரண்டு தவறலாம். பாகிஸ்தான் பயங்கரமான அணி. அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவர்கள் திடீரென பிரமாதமாக ஆடுவார்கள். திடீரென எளிதான ஆட்டத்தில் கூட தோற்று போய் விடுவார்கள். இருப்பினும் அவர்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. அரைஇறுதிக்கு வந்த பிறகு யார், யாரை வீழ்த்துவார்கள்? என்பதை கணிக்க முடியாது. அன்றைய நாளின் நிலைமை, ஆடுகளத்தின் தன்மை, எங்கு விளையாடுகிறார்கள். அணி முழு தகுதியுடன் இருக்கிறதா? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இது மிகப்பெரிய தொடர். திடீரென முக்கியமான வீரர்களுக்கு கூட காயங்கள் ஏற்படலாம். அப்படி அவர்கள் ஆடமுடியாமல் போனாலும் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். எனவே அன்றைய நிலைமையை பொறுத்து தான் எந்த அணியின் கை ஓங்கும் என்பதை சொல்ல முடியும்.

கேள்வி: இந்த போட்டி தொடரில் எந்த பேட்ஸ்மேன், பவுலர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: விராட் கோலி நன்றாக விளையாட வேண்டும் என்பது எனது ஆசையாகும். அவரை மாதிரி ஒரு வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அவர், இவர் என்பதையெல்லாம் தாண்டி குறிப்பிட்ட ஒரு வீரர் அடித்து ஆடினாலே, அந்த அணிக்கே ஒரு தெம்பு கிடைக்கும். குறிப்பாக டோனியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினால் ஒட்டு மொத்த அணிக்கே தெம்பும், உற்சாகமும் வந்து விடும். அதே போல் விராட்கோலி சிறப்பாக செயல்பட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

இதே போல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செயல்பாடும் முக்கியமானதாகும். சிராஜ், ஷமியை விட பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். அவரை பவுலிங்கில் ஒரு விராட்கோலி என்பேன். இந்த போட்டி தொடர் முழுவதும் பும்ரா முழு உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத் திறனுடனும் இருக்க வேண்டும். அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல 50 சதவீத வாய்ப்பை உருவாக்கி தரும். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முக்கிய துருப்புசீட்டாக இருப்பார்கள்.

கேள்வி: 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறீர்கள். அதில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?

பதில்: உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பதே எப்போதும் மறக்க முடியாத விஷயம் தான். அதுவும் உலகக் கோப்பை போட்டியில் எனது அறிமுக ஆட்டத்திலேயே (ஜிம்பாப்வேக்கு எதிராக) அரைசதம் அடித்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அதே போல் ஜாம்பவான் தெண்டுல்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பை (பாகிஸ்தானுக்கு எதிராக) பெற்றதும் என்றென்றும் மறக்க முடியாதது.

இவ்வாறு சடகோபன் ரமேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்