'நான் நீண்ட காலமாக விராட் கோலியின் ரசிகன்' - விவியன் ரிச்சர்ட்ஸ்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.;
பெங்களூரு,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதில் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101* ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் வாழ்நாள் சாதனையும் சமன் செய்துள்ளார்.
இந்நிலையில் தாம் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது, விக்கெட்டுக்காக நடுவர்களிடம் வெறித்தனமாக அவுட் கேட்பது போன்ற விராட் கோலியின் செயல்பாடுகள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-"நான் நீண்ட காலமாக விராட் கோலியின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் சச்சின் தெண்டுல்கர் போன்ற மகத்தான வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த உலகக்கோப்பைக்கு முன் விராட் சில கடினமான நேரங்களை சந்தித்தார். குறிப்பாக சிலர் அவரைப் பற்றி சில விமர்சனங்களை வைத்தனர். இருப்பினும் அவருக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும்.
அவருடைய பார்ம் குறித்து அனைவரும் பல்வேறு விதமாக பேசினார்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய உச்சகட்ட பார்முக்கு வந்துள்ளார். அவரைப் போன்ற ஒருவர் மிகவும் மோசமான பார்மிலிருந்து மீண்டு வந்துள்ளதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. பொதுவாக பார்ம் தற்காலிகமானது என்று சொல்வார்கள்.
அவர் மீண்டும் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தி விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலி கிரிக்கெட்டின் பெருமை. என்னையும் அவரையும் வைத்து பலரும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஏனெனில் களத்தில் எங்களுடைய ஆர்வம் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த வகையில் விராட் கோலியின் ஆர்வம், களத்தில் பீல்டிங் செய்வது, நடுவர்களிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.