'தனியுரிமையை மீறுகிறீர்கள்' - கிரிக்கெட் சேனலை விமர்சித்த ரோகித் சர்மா

ரோகித், கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராருடன் பேசிய ஆடியோவுடன் கூடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-05-19 12:42 GMT

image courtesy: PTI 

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. அப்போது கொல்கத்தா அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்ற ரோகித் சர்மா, வீரர்களுடன் நீண்ட நேரம் பேசினார். அத்துடன் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயருடன் அவர் நீண்ட நேரம் பேசினார்.

குறிப்பாக "இங்கே அனைத்தும் ஒவ்வொன்றாக மாறி வருகிறது. என்ன நடந்தாலும் இது நான் கட்டிய கோயில். எது நடந்தாலும் இதுவே எனக்கு கடைசி" என்று அவரிடம் ரோகித் கூறுவதுபோல் ஆடியோவுடன் கூடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த வருடம் கண்டிப்பாக ரோகித் கொல்கத்தா அணிக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் பேசத் துவங்கினர். இருப்பினும் அதை கொல்கத்தா அணியின் இயக்குனர் வெங்கி மறுத்தார்.

அந்த சூழ்நிலையில் லக்னோ - மும்பை மோதிய போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் தவால் குல்கர்னியுடன்  ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அதை கேமராமேன் அருகே சென்று படம் பிடித்தார். அப்போது ரோகித் சர்மா, "தயவு செய்து ஆடியோ ரெக்கார்டிங்கை நிறுத்துங்கள். ஏற்கனவே வெளியிட்ட ஒரு ஆடியோ என்னை மிகப் பெரிய பிரச்சினையில் தள்ளியுள்ளது" என்று கேமராமேனிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை விமர்சித்து ரோகித் சர்மா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை அனைவரும் ஊடுருவக்கூடியதாகிவிட்டது. இப்போது கேமராக்கள் பயிற்சியின்போது அல்லது போட்டி நாட்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நாங்கள் செய்யும் ஒவ்வொரு உரையாடலையும் பதிவு செய்கின்றன.

எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிடம் கேட்டுக் கொண்ட போதிலும், ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும். பார்வையாளர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவது ஒரு நாள் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்