ஐ.பி.எல். கிரிக்கெட்: இன்றைய போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்
இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.;
கொல்கத்தா,
கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒரு சேர சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணியால் எழுச்சி காண முடியும். சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகங்களுடன் அந்த அணி களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
பேட்டிங்கில் டிவான் கான்வே (258 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (235 ரன்கள்), ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரானா, ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனாவும் வலுசேர்க்கிறார்கள். ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.