ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணியின் கடைசி ஓவர் சாதனை

கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது.

Update: 2023-04-09 21:36 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான 'திரில்' வெற்றியை ருசித்தது.

கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் வீசினார். முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை புல்டாசாக எதிர்கொண்ட ரிங்கு சிங் அதை சிக்சருக்கு துரத்தினார். தொடர்ந்து மேலும் இரு புல்டாஸ்களை சிக்சருக்கு தெறிக்க விட்டார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்ததால் பதற்றம் தொற்றியது. கேப்டனும், சக வீரர்களும் யாஷ் தயாளுக்கு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிறகு 5-வது பந்தை யாஷ் தயாள் 'ஷாட்பிட்ச்'சாக வீசினார். அதை அலாக்காக சிக்சருக்கு ஓடவிட்ட ரிங்கு சிங், கடைசி பந்தையும் இதே போல் சிக்சருக்கு தூக்கியடித்து நம்ப முடியாத ஒரு முடிவை கொண்டு வந்தார்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்ட போது, அதை 5 சிக்சருடன் வெற்றிகரமாக எட்டிப்பிடித்தது ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிக்கு கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்