ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி திணறல்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

Update: 2023-04-25 16:54 GMT

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் விர்திமான் சகா 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின், டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தது. இதனால் குஜராத் அணியின் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியில் அபினவ் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி 3 விக்கெட்டுகளை (ரோகித் சர்மா 2 ரன், இஷான் கிஷன் 13 ரன்கள், திலக் வர்மா 0 )இழந்து விளையாடி வருகிறது. தற்போது மும்பை அணி 10 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்