ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும்: சுரேஷ் ரெய்னா விருப்பம்
கடுமையாக உழைக்கும் விராட்கோலிக்காக இந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.;
நொய்டா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நொய்டாவில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ராஞ்சி டெஸ்டில் துருவ் ஜூரெலின் விக்கெட் கீப்பிங் என்னை கவர்ந்தது. இந்த நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். எனவே எங்கும், எப்போதும் எதையும் இழக்க விரும்பாத அச்சமற்ற மனப்பான்மை அவரிடம் உள்ளது. ஜூரெல் அற்புதமான வீரர். நான் அவருடன் இணைந்து உத்தரபிரதேச அணிக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோருக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு அளித்த விதம் பாராட்டுக்குரியது. டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதும், முக்கியமான டெஸ்டில் ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும் போது அடுத்தடுத்து அரைசதங்கள் (ராஜ்கோட் டெஸ்டில் சர்ப்ராஸ்கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்) அடிப்பதும் எளிதான காரியமில்லை.
ஐ.பி.எல். போட்டியில் இந்த முறை விராட்கோலியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் நீண்டகாலமாக கோப்பையை வெல்லாமல் உள்ளனர். கடந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. ஆனால் இந்த ஆண்டு கோப்பையை ஒருமுறையும் கைப்பற்றாத பெங்களூரு அணி மகுடம் சூடும் என்று நம்புகிறேன். விராட்கோலி உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளார். அவர் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கருதுகிறேன்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை முக்கியமானது. ஏனெனில் 2010-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் நான் விளையாடினேன். அங்குள்ள ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது எளிதானது கிடையாது. இன்னிங்சை கட்டுப்படுத்த உங்களுக்கு விராட்கோலி போன்ற ஒருவர் அணிக்கு தேவையாகும். விராட்கோலி இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதில் மாஸ்டர். அத்துடன் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு தெரியும். தற்போது நம்மிடம் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். அவர்களால் மற்றவர்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன் மறுமுனையில் அச்சமற்ற ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கும் சமீர் ரிஸ்வி (உத்தபிரதேசத்தை சேர்ந்த 20 வயது சுழற்பந்து வீச்சாளர்) மிகவும் சிறப்பான வீரர். இளம் வீரரான அவர் இந்த சீசனில் நிச்சயம் நன்றாக ஆடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.