2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.;
கெபேஹா,
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. டர்பனில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி இன்னும் ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளன. அதனால் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கும், சரியான அணிச்சேர்க்கையை அடையாளம் காண்பதற்கும் இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா இதுவரை மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறது. இவற்றில் 2-ல் வெற்றியும் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தையும் மழை அச்சுறுத்துகிறது. அங்கு இன்று மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாலை நேரத்தில் மழையின் தாக்கம் குறைய வாய்ப்பிருப்பதால், குறைந்த ஓவர்களுடன் போட்டி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, முகேஷ்குமார், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங்.
தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், மேத்யூ பிரீட்கே, மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் அல்லது கிளாசென், டேவிட் மில்லர், டோனோவன் பெரீரா, மார்கோ யான்சென் அல்லது பெலுக்வாயோ, கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜீ, நன்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.