5-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.;
பர்மிங்கம்,
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில், புஜாரா களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த விஹாரி 20 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் 15 ரன்னில் வெளியேற இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் விளாசினார். அதிரடியாக ஆடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் கடந்தார். அடுத்துவந்த ஷர்துல் 1 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.