கோலியின் ஓட்டல் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த நபர்- அதிருப்தியில் கோலி செய்த காரியம்..!

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-31 11:06 GMT

Image courtesy: AFP/ Instagram virat.kohli

பெர்த்,

டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஓட்டல் அறை தங்கி உள்ளனர்.

இந்த ஓட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் கோலி இல்லாத நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவரின் அறையை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விராட் கோலியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவால் ஆத்திரமும். அதிருப்தியும் அடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து வீடியோ எடுத்த ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், "ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன்.

ஓட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மிகப்பெரிய நட்சத்திர வீரரின் ஓட்டல் அறையில், அவர் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஓட்டல் அறைக்குள் நுழைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்