கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும்...லக்னோ பிட்ச் குறித்து பாண்ட்யா அதிருப்தி...!

நியூசிலாந்துக்கு எதிரான நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 19.5 ஓவர்கள் முடிவில் 100 ரன் இலக்கை விரட்டி பிடித்தது.

Update: 2023-01-30 06:45 GMT

Image Courtesy: AFP

லக்னோ,

இந்தியாவுக்கு சுற்றுப்பயாணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் தான் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியும் நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இறுதியில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினர். மேலும் இந்த ஆட்டத்தில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம் அளவுக்கு அதிகமாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. அடித்து ஆட முடியாமல் இரு அணி வீரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்டனர்.

20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும்.

120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்