மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் தரவரிசையில் ஆஸி. வீராங்கனை முதலிடம்...!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடம் பிடித்துள்ளார்.

Update: 2023-07-18 09:57 GMT

image courtesy;twitter/@ICC

துபாய்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் வீராங்கனைகளுக்கான புதிய ஒருநாள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டு உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை அணி வீராங்கனை சமாரி அத்தபத்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் இன்று வெளியிட்டு உள்ள புதிய தரவரிசையில் அவரை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். அத்தபத்து 3-வது இடத்திற்கு சரிந்து உள்ளார்.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து தொடரின் 2 போட்டிகளிலும் மூனி சிறப்பாக செயல்பட்டதால்  769 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உள்ளார். இரண்டு போட்டிகளிலும் முறையே அவர் 81 மற்றும் 33 ரன்கள் எடுத்து உள்ளார்.

மூனிக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை நேட் ஸ்கிவர் ப்ரண்ட் 763 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளார். இது அவரது சிறந்த தரநிலை ஆகும்.

இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா 6-வது இடத்திலும்,ஹர்மன்ப்ரீத் கவுர் 8-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லி மேத்யூசை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீராங்கனை நேட் ஸ்கிவர் ப்ரண்ட் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவர் 402 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உள்ளார். ஹெய்லி மேத்யூஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 7-வது இடம் வகிக்கிறார். பந்து வீச்சாளர் மற்றும் அணிகளின் தரவரிசை மாற்றமின்றி தொடருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்