ஒரு நாள் போட்டி தான் ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன் - விராட் கோலி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.;

Update: 2023-08-30 03:57 GMT

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக விராட் கோலி அளித்த பேட்டியில் ஒரு நாள் போட்டி தான் ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

'ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அனேகமாக ஒரு நாள் போட்டி தான் ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன்.

உங்களது தொழில்நுட்பம், நிதானம், சூழலுக்கு தகுந்தபடி ஆடுவது ஆகியவற்றை சோதித்து பார்க்க இந்த வடிவிலான போட்டியே உதவுகிறது. ஒரு நாள் போட்டிகள் தான் எப்போதும் எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதாக நினைக்கிறேன்'. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்