புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை - விராட் கோலி
புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற அழுத்தம் தனக்கு இல்லை என்று விராட் கோலி தெரிவித்தார்.;
திருவனந்தபுரம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர்.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கை பந்து வீச்சை துவக்கத்தில் இருந்தே விளாசித்தள்ளினர். அதிலும் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அபாரமாக விளையாடிய சுப்மன் கில் சதம் விளாசினார்.
அதேபோல் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரன் மெஷின் விராட் கோலியும் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.
2019 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாச தடுமாறிய விராட் கோலி தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 4 இன்னிங்சில் 3 சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46வது சதத்தை 452 வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும், சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.
விராட் கோலி தனது மேட்ச் வின்னிங் சதத்திற்காக 'மேட்ச் ஆப் தி மேட்ச்' விருதையும், இரண்டு சதங்கள் அடங்கிய தொடரில் 283 ரன்கள் எடுத்ததற்காக 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, "எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, இது எனக்குள்ள உள்நோக்கம், நான் விளையாடும் மனநிலை ஆகியவற்றின் ஒரு விளைவாகும். எப்போதும் அணியின் வெற்றி, பேட்டிங் ஆகியவற்றிற்கு உதவுவதே மனநிலை. முடிந்தவரை நீங்கள் அதைச் செய்தால், நீங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவீர்கள். நான் எப்போதும் சரியான காரணங்களுக்காக விளையாடினேன், முடிந்தவரை அணிக்கு உதவுங்கள்.
நீண்ட இடைவேளையில் இருந்து திரும்பி வந்ததில், நான் நன்றாக உணர்கிறேன். ஒரு மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. நான் எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். இன்று அதே போல், நான் அங்கு பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் தற்போது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன், இது தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
முகமது சமி எப்பொழுதும் எங்களுக்காக இருக்கிறார், ஆனால் சிராஜ் முன்னேறிய விதம் சிறப்பாக உள்ளது. அவர் பவர்பிளேயில் அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது எங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரச்சினையாக இருந்தது. அவர் எப்போதும் பேட்டர்களை சிந்திக்க வைப்பார், இது நாங்கள் உலகக் கோப்பைக்கு செல்வதற்கான சிறந்த அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இதையடுத்து 391 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. வெறும் 73 ரன்களில் இலங்கை அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.