என் நாட்டுக்கு எதிராக எதையும் என்னால் கேட்க முடியாது.. சர்ச்சைக்குரிய சைகை குறித்து கம்பீர் விளக்கம்

இந்தியா- நேபாளம் போட்டியின் போது ரசிகர்களை நோக்கி சர்ச்சைக்குரிய சைகையை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கம்பீர் விளக்கியுள்ளார்.

Update: 2023-09-05 05:39 GMT

பல்லகெலெ,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 'குரூப் 4' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியின் வர்ணனையாளர் குழுவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார். அவர் வர்ணனை அரங்கை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியின் பெயர்களை கோஷமிடத் தொடங்கினர். கம்பீர் அவர்களை நோக்கி நடு விரலை காண்பிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் கிரிக்கெட் வீரரின் இந்த சைகை ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. தோனி மற்றும் கோலிக்கு ஆதரவான முழக்கங்கள் கம்பீரை எரிச்சலடையச் செய்ததாக ரசிகர்கள் நம்பினர். அதனால் தான் அவர் ரசிகர்களை நோக்கி அவ்வாறு செய்தார் என்பது போல கருத்துக்கள் நிலவின.

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் ( முன்பு டுவிட்டர் ) தளத்தில் பதிவிட்டுள்ள கம்பீர்,

"உண்மை அதன் காலணிகளை அணிந்து முடிப்பதற்குள், ஒரு பொய் உலகின் பாதி தொலைவு பயணிக்க முடியும். எல்லாம் தோன்றுவது போல் இல்லை. நம் தேசத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முழக்கங்களுக்கு நான் அப்படி நடந்து கொண்டேன் என்பதை எந்த இந்தியனும் புரிந்து கொள்வான். நான் எங்கள் வீரர்களை நேசிக்கிறேன், நான் என் நாட்டை நேசிக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

இந்த போட்டியின்போது சர்ச்சைக்குரிய சைகையை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக  ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது கம்பீர் விளக்கினார். அதில்,

"சமூக ஊடகங்களில் காட்டப்படுவதில் உண்மை இல்லை. இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி காஷ்மீர் பற்றி பேசினால் உங்களுக்கு முன்னால் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும் எதிர்வினையாற்றுவார் என்பதே உண்மை. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் 2-3 பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அதற்கு இது என் இயல்பான எதிர்வினை. என் நாட்டுக்கு எதிராக எதையும் என்னால் கேட்க முடியாது. எனவே, அதுவே எனது எதிர்வினை," என்று கூறினார்.

ஐபிஎல் 2023-ல் கோலியுடன் சண்டையிட்டது காரணம் அல்ல

கோலியும் கம்பீரும் பலமுறை மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், கோலியுடன் ஏற்பட்ட தகராறு அவரது சைகையின் பின்னணியில் இல்லை என்று கம்பீர் தெளிவுபடுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்