இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி: மைக்கேல் வாகனை கிண்டல் செய்த வாசிம் ஜாபர்- வைரலாகும் பதிவு
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.;
மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக் குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி கண்டது. கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்திடம் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த தோல்வியின் எதிரொலியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியையும் மைக்கேல் வாகனையும் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "போட்டி சுருக்கம்" என்ற வாசகத்துடன் ஒரு வீடியோவை பகிர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை டேக் செய்துள்ளார். வாசிம் ஜாபரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.