விராட் கோலி 110 சதங்கள் அடிப்பார்... பாக். முன்னாள் வீரரின் கணிப்பு
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கூறியுள்ளார்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. பல சாதனைகளை படைத்துள்ள கோலி, சர்வதேச அளவில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் 75 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். கோலி இந்த சாதனையை முறியடிப்பாரா என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்றும், அவர் 110 சதங்கள் அடிப்பார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது;
விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது. தற்போது அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
விராட் கோலி 110 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை முறியடிப்பார். அவர் ஆக்ரோஷமாக ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் ஆவார். சச்சின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று சக வீரரிடம் ஒருமுறை சொன்னது நினைவு இருக்கிறது.
அப்போது நாங்கள் கொல்கத்தாவில் ஆடிக் கொண்டிருந்தோம். முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. டெண்டுல்கர் பெவிலியன் திரும்பிய பிறகு மைதானம் பாதி காலியாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.