கடந்த 2 போட்டிகளிலும் அவர்தான் எங்களை வெற்றிபெற வைத்துள்ளார் - மார்க்ரம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வென்றது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.;
ஆன்டிகுவா,
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்த 164 ரன்களை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், "கடைசி 3 ஓவர்களில் ஆட்டம் எங்களுக்கு எதிராக திரும்பியது. ஆனால் பவுலர்கள் சரியான திட்டத்தை செயல்படுத்தி வெற்றிபெற வைத்தனர். பவர் பிளேவிற்கு பின் பிட்ச் ஸ்லோயராக மாறியதாக எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாகவே சேர்த்திருந்தோம். இருந்தாலும் சரியாக திட்டத்தை செயல்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.
கடந்த 2 போட்டிகளிலும் டி காக் தான் எங்களை வெற்றிபெற வைத்துள்ளார். சில ஓவர்களில் அதிக ரன்கள் சென்ற போது, பதற்றம் அதிகரித்தது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் இது நடக்கும். எங்களிடம் சரியான திட்டம் இருந்தது. ஆனால் அதனை செயல்படுத்த முடியவில்லை. ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச் சரியாக கையில் சிக்கியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.