க்ரீன் - திலக் வர்மா அதிரடி...மும்பை 192 ரன்கள் குவிப்பு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.
ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதிக்கட்டம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்துவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை மற்றும் ஐதராபாத அணிகள் தலா 4 ஆட்டங்களில் ஆடி அதில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.
இந்த ஆட்டத்தில் யார் தங்களது 3வது வெற்றியை பதிவு செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த இணை 41 ரன் சேர்த்த நிலையில் ரோகித் 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கேமரூன் க்ரீன் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடியில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 38 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்.
இதையடுத்து திலக் வர்மா கேமரூன் க்ரீனுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத அணி ஆட உள்ளது.