உலகக் கோப்பை தொடர்; இந்திய அணியில் 4வது இடத்தில் பேட் செய்ய இவர்களை தேர்வு செய்யலாம் - ஆஸி. முன்னாள் வீரர்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.;

Update:2023-08-16 13:17 IST

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் இருக்கும் இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. ஆனால் முன்னணி வீரர்கள் காயத்தில் இருந்து குணமடையாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் மிடில் ஆர்டரில் யார் இறங்கி ரன்கள் சேர்ப்பார்கள் என ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் குணமடையாமல் போகும் பட்சத்தில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரை தேர்ந்தெடுக்கலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ஒருவேளை ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால் அணியில் விக்கெட் கீப்பர் கட்டாயம் தேவை. இஷான் கிஷன் லோயர் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் முழுமையான தொடக்க ஆட்டக்காரர்.

ஒருவேளை ரோகித் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்கினால் நான் 4வது இடத்தில் திலக் வர்மாவை தேர்ந்தெடுப்பேன். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அனைத்து சூழ்நிலைகளிலும் தம்மால் அசத்த முடியும் என்பதை நமக்கு காட்டினார்.

அதே சமயம் ஒருவேளை ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில்லை தொடக்க வீரராக களமிறக்கும் பட்சத்தில் இந்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனை நம்பர் 4வது இடத்தில் தேர்வு செய்யலாம். அந்த இடத்தில் அவரால் எதையாவது அசத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்