இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும்.;
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் டேனி வியாட் (75 ரன்), நாட் சிவெர் புரூன்ட் (77 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் சரிவில் இருந்து மீண்டு 197 ரன்கள் குவித்தது. அத்துடன் இந்தியாவை 6 விக்கெட்டுக்கு 159 ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றியை எளிதில் வசப்படுத்தியது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தவிர மற்றவர்கள் பந்து வீச்சு எடுபடவில்லை. 4 சுழற்பந்து வீச்சாளர்களும் ரன்களை அதிகம் கசிய விட்டனர். அத்துடன் பீல்டிங்கும் மெச்சும் வகையில் அமையவில்லை. பேட்டிங்கில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (52 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (26 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.
இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும்.
இங்கிலாந்தின் சவாலை சமாளிக்க இந்திய அணி பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது முக்கியமாகும். தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 28 முறை நேருக்கு நேர் மோதியதில் இங்கிலாந்து 21 தடவையும், இந்தியா 7 முறையும் வென்று இருக்கின்றன. இந்திய மண்ணில் இங்கிலாந்து 10-ல் மோதி 8-ல் வெற்றி பெற்று இருப்பதும் இதில் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், கனிகா அகுஜா, பூஜா வஸ்ட்ராகர், தீப்தி ஷர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், ரேணுகா சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து: சோபியா டங்லி, டேனி வியாட், அலிஸ் கேப்சி, நாட் சிவெர் புரூன்ட், ஹீதர் நைட் (கேப்டன்), அமி ஜோன்ஸ், பெயா கெம்ப், சோபி எக்லெஸ்டோன், சாரா கிளென், லாரென் பெல், மஹிகா கவுர்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.