கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா-இங்கிலாந்து மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

Update: 2022-07-16 19:23 GMT

மான்செஸ்டர்,

ஒரு நாள் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் பந்து வீச்சாளர்களின் ஜாலமே கொடிகட்டி பறந்தது. ஓவலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரித் பும்ரா 19 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் இங்கிலாந்து 110 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதே போன்ற மோசமான அனுபவத்தை இந்திய அணி லண்டன் லார்ட்சில் சந்தித்தது. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே 6 விக்கெட்டுகளை சாய்க்க, இந்தியா 146 ரன்னில் அடங்கியது. இதனால் கடைசி ஆட்டத்தில் யாருடையை கை ஓங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மைதானம் எப்படி?

இந்திய அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் பேட்டிங் நிலையானதாக இல்லை. தொடர்ந்து தடுமாறும் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்திலாவது எழுச்சி பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதே போல் ரோகித் சர்மா- ஷிகர் தவான் கூட்டணி நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். எதிரணியில் முதல் 2 ஆட்டங்களில் சொதப்பிய ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ரன்வேட்டை நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். மொத்தத்தில் இரு அணிகளும் தொடரை சொந்தமாக்க வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டி நடக்கும் ஓல்டு டிராப்போர்டு ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கக்கூடும். கடைசியாக இங்கு கடந்த 9 ஆட்டங்களில் 6 முறை முதலில் பேட் செய்த அணி 290 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

இந்திய அணி இங்கு 11 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1979-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக கனடா 45 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

மாலை 3.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாக்குர்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), விலிங்ஸ்டன், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டான் அல்லது சாம் கர்ரன், பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லே.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்