தர்மசாலா மைதானம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி..!!

தர்மசாலா மைதானம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Update: 2023-10-10 06:32 GMT

image courtesy; AFP

தர்மசாலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

உலகக்கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் தர்மசாலா மைதானத்தில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தர்மசாலா மைதானம் உலகக்கோப்பை போட்டிகளுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " சிலரைபோல் என்னைப் பொறுத்த வரையும் தர்மசாலா மைதானம் சுமாராகவே இருக்கிறது. அதனால் நீங்கள் பீல்டிங் செய்யும் போது டைவ் அடிப்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். ரன்களை சேமிப்பதற்காகவே நாம் டைவ் அடிப்போம். அந்த சூழ்நிலையில் இது போன்ற களங்கள் அதற்கு சாதகமானதாக இருக்காது. ஆனால் இதை காரணமாக கூறாமல் நாங்கள் அதற்கேற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயம் உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட நீங்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பெரும்பாலான மைதானங்களில் பீல்டிங் செய்யும் போது வீரர்கள் பந்தை தடுக்க டைவ் அடிக்கும் போது காயத்தை தவிர்ப்பதற்காக பச்சை புற்கள் அதிகமாக வளர்க்கப்படுவது வழக்கம். ஆனால் இம்மைதானத்தில் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பச்சை புற்களை வளர்ப்பதில் பெரிய சவால் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்