3 நாட்களுக்குள் போட்டி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை - ரோகித் சர்மா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது

Update: 2023-02-12 01:38 GMT

Image Courtesy: AFP

நாக்பூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்களும், இந்தியா 400 ரன்களும் குவித்தது. இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது,

'இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு செஷனாக பந்து வீசுவதற்கு தயாராகி இருந்தோம். ஆனால் அவர்களது விக்கெட்டுகள் ஒரு செஷனுக்குள் சரியும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஆடுகளம் போகப்போக மெதுவான தன்மை கொண்டதாக மாறியது. ஆனால் பந்து பவுன்ஸ் ஆகவில்லை.

இது எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது. ஆஸ்திரேலிய அணியின் மனநிலை குறித்து எனக்கு தெரியாது. எங்கள் அணியினர் நல்ல நிலையில் உள்ளனர். இதுபோன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்புகிறோம். கடந்த 3-4 ஆண்டுகளாக இதுபோன்ற ஆடுகளங்களில் தான் நாங்கள் விளையாடி வருகிறோம். சிறுவயது முதல் நாங்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடி பழகியவர்கள்.

இதனால் ஆடுகளம் குறித்து வீரர்கள் அறையில் பேசுவதில்லை. இந்த போட்டிக்கு முன்பு நாங்கள் நிறைய பயிற்சிகள் எடுத்து தயாரானோம். நீங்கள் நன்றாக தயாராகும் பட்சத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். ஆஸ்திரேலிய எப்போதும் சிறந்த அணியாகும். அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வரும் சக்தி படைத்தவர்கள் என்பதை அறிவோம்.

நாங்கள் எங்களது ஆட்டத்தை இதேபோல் அடுத்து வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம். இனி ஒரு கேப்டனாக அடுத்த ஆட்டம் குறித்து நான் கவனம் செலுத்த வேண்டும். எனது சதம் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இது போட்டி தொடரின் தொடக்க ஆட்டம் மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டதாகும்.

நமது சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் சாய்த்தாலும், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் விரைவில் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர்' என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

'இந்தியாவில் சில சமயங்களில் ஆட்டம் மிக வேகமாக நகர்கிறது. இந்திய அணி சிறப்பாக ஆடியது. ரோகித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பந்து சுழன்றது. ஆனால் ஆடமுடியாத அளவுக்கு சுழலவில்லை.

நாங்கள் முதல் இன்னிங்சில் கூடுதலாக 100 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். இங்கு தொடக்கத்தில் ஆடுவது கடினமானதாகும். அறிமுக வீரரான டாட் மர்பி அருமையாக பந்து வீசினார்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்