மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியா முதலிடம் பிடித்ததா? - ஐ.சி.சி. இணையதளம் வெளியிட்ட செய்தியால் குழப்பம்

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்ததாக ஐ.சி.சி. வெளியிட்ட தவறான செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.

Update: 2023-02-15 22:09 GMT

துபாய்,


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று காலை வெளியிட்டது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்திய அணி தரவரிசையில் 115 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்துக்கு உயர்ந்துள்ளதாகவும், இதுவரை முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டதாகவும் ஐ.சி.சியின் அதிகாரபூர்வ இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையிலும், 20 ஓவர் போட்டி தரவரிசையிலும் முதலிடம் வகிக்கிறது. இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரே சமயத்தில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்திருப்பதாக பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தரவரிசை புள்ளி கணக்கீட்டில் தவறு நடந்திருப்பதாக கூறிய ஐ.சி.சி. ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பதாகவும், இந்தியா 115 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருப்பதாகவும் அடுத்த சில மணி நேரத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 867 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நாக்பூர் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (846 புள்ளி) முதலிடத்தை நெருங்குகிறார். அவரை விட 21 புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ள அஸ்வின் டெல்லி டெஸ்டிலும் விக்கெட் அறுவடை நடத்தினால் 2017-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் நம்பர் ஒன் அரியணையில் ஏறலாம். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 20-ல் இருந்து 16-வது இடத்துக்கு வந்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி 77 இடங்கள் எகிறி 46-வது இடத்தை பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக கார் விபத்தில் சிக்கி மீண்டு வரும் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் சதம் அடித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 16-வது இடத்திலும், புஜாரா 26-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இதே டெஸ்டில் சொதப்பிய ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 6 இடங்களை இழந்து 20-வது இடத்துக்கும், உஸ்மான் கவாஜா இரு இடம் குறைந்து 10-வது இடத்துக்கும் சறுக்கினர்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். இந்தியாவின் அக்ஷர் பட்டேல் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்