வங்காளதேசத்துக்கு எதிரான தோல்வி; அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.
லாகூர்,
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 50 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து வங்காளதேசத்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அளித்த பேட்டியில் கூறியதாவது,
வெற்றி இலக்கை சேசிங் செய்து விடலாம் என்று நினைத்தேன். அவுட் பீல்ட் விரைவாக இருந்தது. அதனால் சேசிங் செய்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் நாங்கள் விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம். வங்காளதேச பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் ரன் ரேட் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் தான் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.
அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும். இன்று நாங்கள் பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி சிறப்பாக செயல்படவில்லை. லாகூர் எங்கள் நாட்டிற்கு அருகில் இருப்பதால், இந்த ஆட்டத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். அடுத்த ஆட்டத்தில் அவர்கள் வந்து எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.