விராட் கோலியுடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்த டீன் எல்கர்
2015-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தம்மிடம் மோதலில் ஈடுபட்டதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.;
கேப்டவுன்,
இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக 35 வயதிலேயே 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 80 சதங்களை அடித்துள்ள அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தரத்திற்கும் திறமைக்கும் பஞ்சமில்லாத விராட் கோலி களத்தில் எப்போதுமே எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படக் கூடியவர். குறிப்பாக எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அசராமல் அதற்கு தக்க பதிலடி கொடுத்து தெறிக்க விடக்கூடிய அவர் எப்போதுமே ஆக்ரோஷமாக செயல்படுபவராக அறியப்படுகிறார்.
அதே சமயம் பந்தை சேதப்படுத்தியதற்காக தடையை அனுபவித்து மீண்டும் வந்த ஸ்டீவ் சுமித்தை கலாய்த்த இந்திய ரசிகர்களை அவ்வாறு செய்யாமல் கைதட்டி பாராட்டுங்கள் என்று சொன்ன தங்கமான குணத்தையும் கொண்டவர் விராட்.
இந்நிலையில் 2015-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தம்மிடம் மோதலில் ஈடுபட்டதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடைசியில் தவறை உணர்ந்து தம்மிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலியும் தாமும் சேர்ந்து ஒரு நாள் அதிகாலை 3 மணி வரை மது குடித்து பின்னர் நண்பர்களாக மாறியதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"2015-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டியில் நான் பேட்டிங் செய்ய வந்தேன். குறிப்பாக அஸ்வினுக்கு எதிராக நான் பேட்டிங் செய்ய தயாரானேன். அப்போது ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் என்னிடம் வம்பிழுக்க வந்தனர். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் அவருடைய நண்பராக இருக்கிறார். அதனால் நான் தென் ஆப்பிரிக்க மொழியில் சொன்ன வார்த்தைகளை அவரால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
எனவே என்னிடம் மோதினால் உங்களை வீழ்த்துவேன் என்று சில கெட்ட வார்த்தைகளுடன் நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவரும் கெட்ட வார்த்தையில் திட்டினார். இருப்பினும் அப்போட்டி இந்தியாவில் நடந்ததால் நான் சற்று கவனத்துடன் இருந்தேன். அதன் பின் டி வில்லியர்ஸ் ஏன் என்னுடைய அணி வீரரிடம் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று விராட் கோலியிடம் நேரடியாக கேட்டார்.
அதன் பின் 3 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவில் விளையாட வந்த விராட் கோலி என்னை அழைத்து இத்தொடர் முடிந்ததும் நாம் மது குடிக்க செல்வோம் என்று சொன்னார். தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் அவர் என்னிடம் சொன்னார். அதைத்தொடர்ந்து நாங்கள் ஒரு நாள் காலை 3 மணி வரை மது குடித்தோம். அதுதான் விராட் கோலியுடன் என்னுடைய முதல் சந்திப்பாகும்"என்று கூறினார்.