உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று அட்டவணை வெளியீடு: எதிரெதிர் பிரிவில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் எதிரெதிர் பிரிவில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன.

Update: 2023-05-23 21:11 GMT

துபாய்,

உலகக் கோப்பை கிரிக்கெட்

10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், தகுதி சுற்று போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது.

தகுதி சுற்றில் யார்-யார்?

இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.

சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் எதிர்பிரிவில் இருந்து வந்த அணிகளுடன் மட்டும் மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பதுடன், உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

முதல் நாளான ஜூன் 18-ந்தேதி போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே, நேபாளம் அணியையும், வெஸ்ட் இண்டீஸ் அணி அமெரிக்காவையும் சந்திக்கிறது. 19-ந்தேதி இலங்கை அணி அமீரகத்துடனும், அயர்லாந்து ஓமனுடனும் மோதுகின்றன. சூப்பர்6 சுற்றில் இருந்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்