உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Update: 2023-10-27 12:33 GMT

image credit: @TheRealPCB

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை சென்னையில் எதிர்கொள்கிறது. 5 ஆட்டங்களில் ஆடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா 9 ரன்னிலும், இமாம் உல் ஹாக் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் பாபருடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். சிறிது அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான், 31 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்த நிலையில், சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி அவுட்டானார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிவந்த கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதன் பின்னர் சவுத் சகீல் மற்றும் ஷதாப் கான் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வப்போது பவுண்டரிகளையும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. சவுத் சகீல் அரைசதம் அடித்து 52 ரன்னிலும், ஷதாப் கான் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தவறினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்