கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது சென்னை அணி..!
5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா,
16வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர்.நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து ரஹானே களமிறங்கினார்.
கான்வே , ரஹானே இணைந்து பவுண்டரி , சிக்ஸர்கள் விளாசினர். கான்வே அரைசதம் பின்னர் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே , ரஹானேவுடன் இணைந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இருவரும் இணைந்து பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்க விட்டனர். ரஹானே 24 பந்துகளில் , துபே 21 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.
பின்னர் 50 ரன்களில் துபே வெளியேறினார். ரஹானே அதிரடியை தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு235 ரன்கள் குவித்தது. ரஹானே 71ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 236ரன்கள் இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக நாராயண் ஜெகதீசன் , சுனில் நரைன் களமிறங்கினர். சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமலும் , ஜெகதீசன் 1 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும் , நிதிஸ் ராணா 27 ரன்களை எடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது .மறுபுறம் நிலைத்து ஆடி ரிங்கு சிங் அரைசதம் அடித்தார்
இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் எடுத்தது.இதனால் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் துஷார் தேஷ்பான்டே , தீக்ஸனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்
இந்த வெற்றியினால் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.