ஆர்சிபி அணிக்கு எதிராக ஹெல்மட்டை தூக்கி எறிந்து வெற்றி கொண்டாட்டம்...ஜெயிச்ச சந்தோஷத்துல அப்படி பண்ணிட்டேன் - மனம் திறந்த அவேஷ் கான்
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் அவேஷ் கான் ஹெல்மட்டை தூக்கி எறிந்து வெற்றியை கொண்டாடினார்.;
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறால் வெற்றி பெற்ற லக்னோ அணியானது த்ரில் வெற்றியை ருசித்து இருந்தது. அப்போது கடைசி பந்தில் பேட்டிங் செய்த ஆவேஷ் கான் ரன் ஓடி முடித்ததும் வெற்றியை கொண்டாடும் வகையில் தனது ஹெல்மெட்டை கழற்றி தரையில் எறிந்தார்.
அப்போது அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதோடு போட்டி முடிந்து செய்த இந்த செயலுக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு குறித்து தற்போது பேசியுள்ள ஆவேஷ் கான் கூறுகையில்,
அந்த போட்டி முடிந்து ஏராளமான ரசிகர்கள் பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னரே நான் ஹெல்மட்டை வீசி இருக்க கூடாது நாம் செய்தது தவறு என்று எண்ணினேன். வெற்றி பெற்ற உணர்ச்சி வேகத்தில் அதனை நான் செய்துள்ளேன்.
ஆனால் தற்போது அது தவறு என்று நான் தெரிந்து கொண்டேன்.இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்கிற ஆசை என்னிடம் உள்ளது.
அதோடு நான் என்னுடைய பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்தி தற்போது பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன். ஆனாலும் இந்திய அணிக்காக நான் விளையாடுவது தேர்வுக்குழு வீரர்கள் கையில் தான் இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் நான் செய்த சில தவறுகளை வீடியோ மூலம் பார்த்து அதற்கு ஏற்றவாறு என்னுடைய பந்துவீச்சு முறைகளை மாற்றி பயிற்சி செய்து வருகிறேன். நிச்சயம் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடுவேன் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.