இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் விலகல்
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஹேசில்வுட் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.;
நாக்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு கடந்த மாதம் சிட்னியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கான பயிற்சி முகாமிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனை அவரே நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்கும் முதலாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.
ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் விரல் காயத்தால் பந்து வீச முடியாத நிலைமையில் தவிக்கிறார். இப்போது ஹேசில்வுட்டும் விலகுவது அந்த அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான்.
32 வயதான ஹேசில்வுட் 59 டெஸ்டுகளில் விளையாடி 222 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவருக்கு பதிலாக தொடக்க டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் இடம் பெறுவார் என்று தெரிகிறது. 33 வயதான போலன்ட் இதுவரை 6 டெஸ்டில் ஆடி 28 விக்கெட் கைப்பற்றி உள்ளார். வெளிநாட்டு மண்ணில் அவர் டெஸ்ட் போட்டியில் களம் காண இருப்பது இதுவே முதல் முறையாகும்.