ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட் தொடர்: கால்இறுதியில் இந்திய அணி

இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் நேரடியாக கால்இறுதியில் களம் காணும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-07-28 23:47 GMT

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் 14 அணிகள் கலந்து கொள்கின்றன. செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரை நடைபெறும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் 18 அணிகள் களம் காணுகின்றன. இருபாலருக்குமான பிரிவு போட்டியில் தரவரிசை அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக கால்இறுதியில் களம் காணும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டம்பை பேட்டால் அடித்ததுடன் அந்த அணியின் கேப்டன் நிகார் சுல்தானாவை கேலி செய்த இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு 2 சர்வதேச போட்டியில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்தது. இதனால் ஹர்மன்பிரீத் கவுர் ஆசிய விளையாட்டில் இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே விளையாட முடியும் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேரடியாக கால்இறுதியில் களம் இறங்குவதால் சற்று தாமதமாக தான் சீனா செல்லும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்