ஆசிய கோப்பை: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என பிசிசிஐ தகவல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

Update: 2023-07-12 10:33 GMT

டெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசியகோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் ஆட்டத்தில் 4 போட்டிகள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இருக்கும்.ஒருவேளை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதினால் மூன்றாவது ஆட்டம் இருக்கும் என தெரிவித்தார். 2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லா மைதானத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும்.

பாகிஸ்தானில், நேபாளம்-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகிய 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி தலைவர் ஜகா அஷ்ரப்பை சந்தித்து பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அருண் துமால் கூறி உள்ளார்.

கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பையில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதுவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்