ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை சமாளிக்குமா வங்காளதேசம்? இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியுடன் வங்காளதேசம் மோதுகிறது.

Update: 2023-09-09 00:15 GMT

கொழும்பு,

ஆசிய கிரிக்கெட்

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதுகின்றன.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தப்பித்தது. இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, அசலங்கா, திமுத் கருணாரத்னே நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பதிரானா, தீக்ஷனா, ரஜிதா நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் சூழலில் ஆடுவது இலங்கைக்கு கூடுதல் பலமாகும்.

சாதனை நீடிக்குமா?

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்து சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானை (தலா 12 வெற்றி) பின்னுக்கு தள்ளிவிடும்.

ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்4 சுற்றுக்கு வந்தது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி, பாகிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 38.4 ஓவர்களில் 193 ரன்னில் அடங்கியது. அனுபவம் வாய்ந்த ஷகிப் அல்-ஹசன் (53 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (64 ரன்) அரைசதம் அடித்ததால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும்

பேட்டிங்கில் சீரற்ற தன்மை அவர்களின் பலவீனமாக உள்ளது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தசைப்பிடிப்பால் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். டாப்-5 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை எட்டலாம். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வங்காளதேசத்தின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து விடும் என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். மொத்தத்தில், வலுவான இலங்கையின் வெற்றிப்பயணத்துக்கு வங்காளதேச வீரர்கள் முட்டுக்கட்டை போடுவார்களா? அல்லது மீண்டும் அடங்கிப்போவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மழையால் பாதிக்குமா?

இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அங்கு மழை பெய்வதற்கு 68 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 120 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 74-ல் வெற்றியும், 39-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 ஆட்டத்தில் முடிவில்லை. அதே சமயம் வங்காளதேசத்துக்கு இது ராசியான மைதானம் கிடையாது. இங்கு அந்த அணி 11 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்று இருக்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 375 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். 2002-ம் ஆண்டு நெதர்லாந்து 86 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

பிற்பகல் 3 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, பதிரானா.

வங்காளதேசம்: முகமது நைம், லிட்டான் தாஸ், அபிப் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹரிடோய், முஷ்பிகுர் ரஹிம், ஷமிம் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமுத்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்