9-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்' வெற்றி..!!

பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்தது.;

Update: 2023-09-29 00:15 GMT

கோப்புப்படம்


9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் முதல்முறையாக நடந்தது. அயர்லாந்து, பெர்முடா அணிகள் அறிமுகம் ஆகின. இதனால் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும்.

பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்தது. கேப்டன் ராகுல் டிராவிட், தெண்டுல்கர், ஷேவாக், டோனி, சவுரவ் கங்குலி, யுவராஜ்சிங், ஹர்பஜன், ஜாகீர்கான், கும்பிளே என்று மெகா நட்சத்திர பட்டாளத்தை கொண்டிருந்த இந்திய அணி முதல் லீக்கில் வங்காளதேசத்துடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 49.3 ஓவர்களில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் தமிம் இக்பால் (51 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (56 ரன்), ஷகிப் அல்-ஹசன் (53 ரன்) ஆகிய இளம் சூரர்களின் அரைசதத்துடன் வங்களதேசம் 48.3 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போதே இந்திய ரசிகர்களின் இதயம் சுக்கு நூறானது.

அடுத்து கத்துக்குட்டியான பெர்முடாவை போட்டுத் தாக்கிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் 400 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இலங்கையை சந்தித்தது. இதில் இலங்கை நிர்ணயித்த 255 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 43.3 ஓவர்களில் 183 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக டிராவிட் 60 ரன் எடுத்தார். தெண்டுல்கர், விக்கெட் கீப்பர் டோனி டக்-அவுட் ஆனார்கள். 2-வது தோல்வியின் மூலம் இந்தியா முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் டோனி உள்ளிட்ட சில வீரர்களின் வீட்டை கற்கள் வீசி தாக்கினார்கள்.

இன்னொரு பக்கம் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுக்கும் (டி பிரிவு) இதே போல் மரண அடி விழுந்தது. இன்ஜமாம் உல்-ஹக் தலைமையிலான அந்த அணி புதுவரவான அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 132 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்து போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஏற்கனவே ஐ.சி.சி.யின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் டிக்கெட் விலை உயர்வால் ரசிகர்கள் வருகை மந்தமாக இருந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக்குடன் 'அவுட்' ஆனதால் போட்டி களை இழந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். 



இந்த அதிர்ச்சி தோல்விகளுக்கு மத்தியில் எதிர்பார்த்தபடியே ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் பேராதிக்கம் தொடர்ந்தது. லீக் சுற்றில் 3 வெற்றி, சூப்பர்8 சுற்றில் 7 வெற்றி என்று கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவை 149 ரன்னில் அடக்கி விரட்டியடித்தது. மற்றொரு அரைஇறுதியில் இலங்கை 81 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஊதித்தள்ளியது.

ஏப்ரல் 28-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான இறுதிப்போட்டி அரங்கேறியது. மழையால் 38 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 13 பவுண்டரி, 8 சிக்சருடன் 149 ரன்கள் நொறுக்கினார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் சனத் ஜெயசூர்யா (63 ரன்), விக்கெட் கீப்பர் சங்கக்கரா (54 ரன்) நின்றது வரை வெற்றி வாய்ப்பு தென்பட்டது. அவர்கள் வீழ்ந்ததும் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் 36 ஓவர்களில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 33 ஓவர் முடிந்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்த சமயம் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி ஆஸ்திரேலியா 37 ரன் முன்னிலை பெற்றிருந்ததால் வெற்றி பெற்று விட்டதாக ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். ஆனால் நடுவர்கள் ஸ்டீவ் பக்னரும், அலிம் தரும், 'போட்டி இன்னும் நிறைவடையவில்லை. மாற்று நாளான மறுநாளில் தொடரலாம்' என்று கூறியதும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு கனம் திகைத்து போனார்கள். ஏனெனில் 2-வது பேட்டிங் செய்யும் அணி 20 ஓவர்களை நிறைவு செய்து விட்டாலே அதன் பிறகு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி முடிவை அறிவிக்க வேண்டும். இது கூட நடுவர்களுக்கு தெரியவில்லையா? என்று குழம்பி போனார்கள். 



பேச்சுவார்த்தைக்கு பிறகு இலங்கை கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ஆட்டத்தை தொடர சம்மதித்தார். போதிய வெளிச்சம் இல்லாததால் எஞ்சிய 3 ஓவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து கடைசி 3 ஓவர் ஏறக்குறைய இருளில் தான் நடந்தது. 36 ஓவர்களில் இலங்கை அணியால் 8 விக்கெட்டுக்கு 215 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதில் கடைசி 3 உலகக் கோப்பையை வரிசையாக வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததும் அடங்கும். உலகக் கோப்பை தொடரில் கடைசியாக ஆடிய 29 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் ஆஸ்திரேலியா பீடுநடை போட்டது. கடைசி கட்டத்தில் தவறான முடிவுகளை எடுத்த நடுவர்கள் பின்னர் மன்னிப்பு கேட்டனர்.

அதிக ரன் குவித்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனும் (3 சதத்துடன் 659 ரன்), விக்கெட் வீழ்த்தியதில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத்தும் (26 விக்கெட்) முதலிடம் பிடித்தனர். தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மெக்ராத் இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

இந்த உலகக் கோப்பையில் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு, தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து வரலாறு படைத்தார். அவர் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் வான் டான் புங்கே வீசிய ஒரே ஓவரில் 6 பந்தையும் சிக்சராக மாற்றினார். ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய முதல் வீரர் கிப்ஸ் தான்.

பயிற்சியாளர் மர்ம பலி

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணி அயர்லாந்திடம் உதை வாங்கிய மறுநாள் (மார்ச் 18-ந்தேதி) கிங்ஸ்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உல்மர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.



 அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் பாகிஸ்தான் வீரர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே தோல்வியால் நொந்து போயிருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இது இன்னொரு பேரிடியாக விழுந்தது. சில மாத கால விசாரணைக்கு பிறகு உல்மரின் மரணம் இயற்கையானது என்று ஜமைக்கா போலீசார் அறிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 58 வயதான பாப் உல்மர் இங்கிலாந்து முன்னாள் வீரர் என்றாலும் அவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்