8-வது முறையாக சாம்பியனான இந்தியா: வேகப்பந்து வீச்சு குறித்து ரோகித் சர்மா கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

Update: 2023-09-17 23:43 GMT

கொழும்பு,

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த முன்னணி வீரர்கள் அனைவரும் திரும்பினர். காயம் காரணமாக அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக தமிழக சுழற்பந்து விச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இலங்ைக அணியில் ஒரே மாற்றமாக காயமடைந்த தீக்ஷனாவுக்கு பதிலாக துஷன் ஹேமந்தா இடம் பிடித்தார். 


சிராஜ் விசுவரூபம்

'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால் தனது முடிவை நினைத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வருந்தியிருப்பார். ஆட்டம் மழையால் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. பதும் நிசாங்காவும், குசல் பெரேராவும் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். குசல் பெரேரா (0), ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 'ஸ்விங்' தாக்குதலில் மிரட்டினார். அவர் அவுட் ஸ்விங்கராக வீசிய பந்தை நிசாங்கா (2 ரன்) அடித்த போது அதை 'பாயிண்ட்' திசையில் நின்ற ஜடேஜா பாய்ந்து விழுந்து அருமையாக கேட்ச் செய்தார். அதே ஓவரில் சமரவிக்ரமா (0), சாரித் அசலங்கா (0), தனஞ்ஜெயா டி சில்வா (4 ரன்) ஆகியோரையும் சிராஜ் காலி செய்து உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். அவரது மாயாஜால பந்துவீச்சால் இலங்கை 12 ரன்னுக்கு 5 விக்கெட் என்று உருக்குலைந்து போனது. வீழ்ச்சியில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை. அத்துடன் அவர் விடவில்லை. கேப்டன் தசுன் ஷனகா (0), குசல் மென்டிஸ் (17 ரன்) ஆகியோரும் அவரது பந்து வீச்சுக்கு இரையானார்கள். இதனால் இலங்கை முழுமையாக சீர்குலைந்தது.

இலங்கை 50 ரன்

எஞ்சிய 3 விக்கெட்டுகளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா கபளீகரம் செய்தார். 15.2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி வெறும் 50 ரன்னில் அடங்கியது. அந்த அணியில் குசல் மென்டிஸ், ஹேமந்தா (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 5 பேர் டக்-அவுட் ஆனார்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே 2012-ம் ஆண்டு பார்ல் நகரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை 43 ரன்னில் சுருண்டுள்ளது.

இந்திய தரப்பில் முகமது சிராஜ் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது மெச்சத்தகுந்த பந்துவீச்சு இதுவாகும். முன்னதாக சிராஜ் தனது 16-வது பந்தில் 5-வது விக்கெட்டை எடுத்து அதிவேகமாக 5 விக்கெட் வீழ்த்திய சாதனையாளர் பட்டியலில் இணைந்தார். 



இந்தியா 'சாம்பியன்'

அடுத்து 51 ரன்கள் இலக்கை இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது. இஷான் கிஷன் 23 ரன்னுடனும் (18 பந்து, 3 பவுண்டரி), சுப்மன் கில் 27 ரன்னுடனும் (19 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (5 ஆட்டத்தில் 9 விக்கெட்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த தொடரில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தை (6 ஆட்டத்தில் சதம் உள்பட 302 ரன்) பிடித்தார்.

ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அதிக முறை ஆசிய கோப்பையை ருசித்த அணியாக இந்தியா வலம் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2-வது முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன.

அடுத்து ஆஸ்திரேலியாவுடன்...

ஆசிய கிரிக்கெட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி அடுத்து உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

ஆட்டநாயகன் பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

இலங்கையை புரட்டியெடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறுகையில், 'எனது ஆட்டநாயகன் விருதுக்குரிய பரிசுத்தொகையை (ரூ.4¼ லட்சம்) மைதான ஊழியர்களுக்கு வழங்குகிறேன். அவர்கள் இதற்கு தகுதியானவர்கள். ஏனெனில் மழை அடிக்கடி குறுக்கிட்ட நிலையில் அவர்கள் இல்லாவிட்டால் இந்த தொடர் நடந்திருக்காது.

வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் நான் எப்போதும் பந்தை ஸ்விங் செய்வதை விரும்புவேன். முந்தைய ஆட்டங்களில் பந்து பெரிய அளவில் ஸ்விங் ஆகவில்லை. ஆனால் இன்றைய தினம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. அதனால் பந்தை சரியான அளவில் பிட்ச் செய்து வீசி நெருக்கடி கொடுத்தேன். அவுட்ஸ்விங்கரில் அதிக விக்கெட்டுகள் கிடைத்தது. எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது' என்றார். 



263 பந்து மீதம் வைத்து...

ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைப்பது இது 10-வது முறையாகும். மேலும் அதிக பந்து மீதம் வைத்து இலக்கை எட்டியதில் இந்தியாவின் மகத்தான வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இந்தியா 231 பந்து எஞ்சியிருந்த நிலையில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.

21 ரன்னுக்கு 6 விக்கெட்; சிராஜ் சாதனை

இலங்கையின் பேட்டிங் முதுகெலும்ைப சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

* முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

* அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.

* முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

* 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.

* இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.

* இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும். 



வேகப்பந்து வீச்சு குறித்து ரோகித் சர்மா திருப்தி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இது போன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள். ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அற்புதமான செயல்பாடு. அதுவும் இறுதிப்போட்டியில் இது மாதிரி அசத்துவது நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்.

சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு லேசான தசைகிழிவு தான். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக இருக்கிறார். பயிற்சியில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட அவர் 99 சதவீதம் உடல்தகுதியை எட்டிவிட்டார்' என்றார். 



பரிசுத்தொகை எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை கையில் ஏந்திய இந்திய அணிக்கு ரூ.1¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த இலங்கைக்கு ரூ.62½ லட்சம் கிடைத்தது. மேலும் பருவமழை காலத்திலும் ஆடுகளத்தை சிறந்த முறையில் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்ட பிட்ச் பராமரிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.41½ லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா அறிவித்து இருந்தார். அதை பரிசளிப்பு விழாவில் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்