5-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

Update: 2024-03-07 09:07 GMT

image courtesy: twitter/ @ICC

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் ரூட் மற்றும் பேர்ஸ்டோ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆனதும் அடங்கும்.

வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்மசாலா மைதானம் அப்படியே தலை கீழாக மாறி சுழலுக்கு சாதகமாக அமைந்தது. அதனை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தினர்.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.

இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்