5வது டி20 போட்டி; நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;

Update:2024-04-28 02:01 IST

Image Courtesy: AFP 

லாகூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 2-1 என நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்