விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்...ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு..காரணம் என்ன..?

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி கட்டணத்தில் இருந்து விராட் கோலிக்கு 50 சதவீதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2024-04-22 12:35 GMT

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு 221 ரன்கள் அடித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரரான விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கி 2 சிக்சர்களும் அடித்து அசத்தினார். அவர் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஹர்சித் ராணா புல்டாசாக வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வதுபோல் தெரிந்தது. இதனால் அவர் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ரிவியூவில் அவர் கீரிசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. மேலும் ரிவியூவில் பந்தை அவர் அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் சரியாக செல்வதுபோல் தெரிந்தது. இதனால் கள நடுவர் தீர்ப்பின் படி விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடனேயே பெவிலியன் நோக்கி சென்றார். அதோடு போட்டி முடிந்த பின்னர் கூட அம்பயர்களுடன் விராட் கோலி அந்த முடிவு குறித்து விவாதித்துக் கொண்டே இருந்தார்.

 

இந்நிலையில் நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு, விதிமுறையை மீறியதாக இந்த போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்